இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE), ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரை எதிர்ப்பதற்காக ஹட்டனில் நடைபெறும் ஒரு முக்கியமான பகிரங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மலையக மாவட்டங்களில் வாழும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றன.
இந்தப் போர் ஒரு தொலைதூர 'பிராந்திய' தகராறு அல்ல. இது, முதலாளித்துவச் சரிவின் காலகட்டத்தில் எரிசக்தி வளங்களைக் கைப்பற்றுவதற்கும், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், அதன் இஸ்ரேலியக் கூட்டாளியின் ஆதரவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்படும் ஒரு கொள்ளையடிக்கும் தாக்குதலாகும். ஈரான் மீதான இந்தத் தாக்குதல், தனது போட்டியாளர்களின், பிரதானமாக சீனா மற்றும் ரஷ்யாவின் செலவில், மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், வாஷிங்டனுடன் தங்களுக்குள் தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், அமெரிக்காவை ஆதரிக்கின்றன.
டிரம்ப் அறிவித்த 'போர் நிறுத்தம்' என்பது, ஆயுதங்களை மீண்டும் நிலைநிறுத்தவும், மறுசீரமைத்து, மீண்டும் ஆக்கிரமிப்புக்குத் தயாராவதற்கான ஒரு பலவீனமான, தந்திரோபாய இடைநிறுத்தமாகும். சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து குண்டு வீசியதாலும், மேலும் தாக்குதல்களுக்காக 'கப்பல்களை ஆயத்தப்படுத்துவதாக' வாஷிங்டன் சமிக்ஞை செய்ததாலும், அது ஒரு போலியான நாடகம் என்பது அம்பலமானது. இந்த இடைநிறுத்தம் எதையும் மாற்றப் போவதில்லை: ஏகாதிபத்திய நோக்கங்கள் அப்படியே இருப்பதோடு ஆளும் வர்க்கத்தினர் எந்தவொரு தற்காலிக அமைதியையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இராணுவ பலத்தை வலுப்படுத்துவார்கள்.
இதற்கு தொழிலாளர்களே விலை கொடுக்கத் தள்ளப்படுவர். வெளிநாட்டில் போர் என்பது உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளையும், விலை உயர்வுகளையும், ஊதியங்கள் மீதான தாக்குதல்களையும் குறிக்கும். இலங்கைத் தொழிலாளர்கள் ஏற்கனவே மோதலால் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மலையக மக்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பான பெருந்தோட்டம் மற்றும் ஏற்றுமதித் துறைகள் உடனடியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், 'நடுநிலை' வகிப்பதாகவும் 'கட்டுப்பாட்டைக்' கடைப்பிடிக்க அழைப்பு விடுப்பதாகவும் காட்டிக்கொண்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவில்லை. அரசாங்கமும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்துள்ளன.
சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமே போர் இயந்திரத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக சக்தி உள்ளது. ஏகாதிபத்தியப் போரை நிறுத்துவதற்கான போராட்டம், தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான, சோசலிச மற்றும் சர்வதேசவாத இயக்கத்தில் வேரூன்றியிருக்க வேண்டும் என்று சோ.ச.க. வலியுறுத்துகிறது.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலின் உண்மையான நோக்கங்கள்; போரும் சிக்கன நடவடிக்கைகளும் எவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்துள்ளன; தொழிலாளர்களைத் தவறாக வழிநடத்துவதில் இலங்கையின் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் போலி இடது போக்குகளின் வகிபாகம்; மற்றும் தொழிலாள வர்க்கத்தையும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கவேண்டிய உறுதியான நடவடிக்கைகள் பற்றியும் ஹட்டன் கூட்டத்தில் நாம் கலந்துரையாடுவோம்.
நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 26
நேரம்: காலை 10:30 மணி
இடம்: நகர மண்டபம், ஹட்டன்
மேலும் படிக்க
- இலங்கைத் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை ஆதரிக்கின்றன
- அமெரிக்காவின் ஹிட்லரும் ஆளும் வர்க்கத்தின் ஒழுக்கநெறியும்
- இலங்கை: ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிராக அணிதிரளுமாறு தொழிலாளர்களும் மாணவர்களும் அழைப்பு விடுக்கின்றனர்
- இலங்கையின் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி ஈரான் போருக்கு எதிராகப் போலியான “உலக மக்கள் சக்திக்கு” அழைப்பு விடுக்கிறது
